டிசம்பர் 14,2022 "Thirukkural for UNESCO" என்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பல கூட்டங்களை இணையவழியிலும், 24 ஆங்கிலக் கூட்டங்களை உலகெங்குமிருந்து ஆளுமைகளை அழைத்து ஒருங்கிணைத்து பயணித்தாலும், இதுவரை அனைவரும் நேரில் சந்தித்ததில்லை.
முதன்முறையாக இருநாட்களுக்கு முன்பு சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. முனைவர்.இரா.பிரபாகரன் , வாசிங்டன் தவிர, மற்ற நான்கு பேரும் முதன்முறையாக சந்தித்து இதுவரை எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள், அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து திட்டமிட்டோம்.
இக்குழு யுனெஸ்கோவில் 12 ஆண்டுகளுக்கு மேல் இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள, திருக்குறள் ஆர்வலர், உலகத் திருக்குறள் அறக்கட்டளை (மொரிசியஸ் ) நிறுவனர் டாக்டர் ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் தலைமையில்
முனைவர். சந்திரிகா சுப்பிரமணியன், நிறுவனர் - தமிழ் வளர்ச்சி மன்றம், ஆஸ்திரேலியா
திரு. சி. இராஜேந்திரன் ,IRS (ஓய்வு), ஒருங்கிணைப்பாளர் - வள்ளுவர் குரல் குடும்பம் ,
திரு. ச. பார்த்தசாரதி, நிறுவனர் - வலைத்தமிழ்.
ஆகியோர் சென்னையில் சந்தித்து விரிவாக ஆலோசனை செய்தோம்.
திருக்குறளை அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாடு அரசு, இந்திய அரசு , பாரிஸ் தமிழ்ச் சமூகம், பாரிஸ் இந்தியத் தூதரகம், யுனெஸ்கோ அமைப்பு , யுனெஸ்கோவில் திருக்குறள் பெறவேண்டிய நான்கு அங்கீகாரங்கள் ஆகியவற்றை ஒரு நேர்க்கோட்டில் உலகப்பொதுமறை என்ற பார்வையில் "Literary Heritage of Mankind" என்ற யுனெஸ்கோவின் வரையறையில் கொண்டுவரும் ஒற்றை முயற்சியை அனைவரையும் ஒருங்கிணைத்து தொடர்ந்து முன்னெடுக்க ஆலோசிக்கப்பட்டது.